உணவு டெலிவரி வண்டியில் சரக்கு சப்ளை! – வகைவகையான மதுக்கள் பறிமுதல்!
சென்னையில் உணவு டெலிவரி நிறுவனங்களின் ஊழியர்கள் உணவு டெலிவரி செய்வது போல சென்று மதுபானங்களை விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு இருப்பதால் சென்னையில் பல பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதனால் அங்கு மதுபானக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் முறைகேடாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்விகி, ஸ்மெட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி பாய்கள் சிலர் சென்னைக்கு வெளியே மது பாட்டில்களை வாங்கி சென்னைக்குள் அதிக விலைக்கு விற்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் சென்னைக்குள் உணவு டெலிவரி பாய்களின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இருவரை பிடித்து சோதனையிட்ட போது பல வகையான மதுபானங்களை அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை சென்னைக்குள் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 200க்கும் அதிகமான மதுப்பாட்டில்களை கைப்பற்றியதுடன், இதுபோல வேறு யாரெல்லாம் முறைகேடாக மது விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.