திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:16 IST)

கலைஞரின் பேனா.. சிலை எதுக்கு வீணா? மீனவர் கூட்டமைப்பு எதிர்ப்பு! – கருத்து கேட்பில் பரபரப்பு!

Kalaingar Pen statue
சென்னை மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் கலைஞரின் பேனாவுக்கு சிலை அமைப்பதற்கு மீனவ கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் மெரினா கடற்கரை பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று பேனா சிலை அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள சின்ன கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல கட்சியினரும், மீனவ கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


அப்போது கூட்டத்தில் பேசிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் பிரதிநிதி, கடற்கரை மேலாண்மை சட்டம் 2011ன் படி கடலில் பேனா அமைப்பது சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். பேனா சிலை அமைக்கப்பட உள்ள பகுதி முகத்துவார பகுதி என்றும், அங்கு பல்வேறு மீனவ குடியிருப்புகள் உள்ளதாலும், முகத்துவார பகுதிகள் மீன்கள் பெருகி வளரும் பகுதி என்பதாலும் இது மீனவ மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் திட்டமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு கூறியபோது அவரை பேசவிடாமல் கீழிருந்து பலரும் கூச்சலிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #கடலில்பேனா_வேண்டாம் என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

Edit by Prasanth.K