1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (11:13 IST)

38 மாணவர்களுடன் சென்ற பல்கலைக்கழக பேருந்து தீப்பிடித்து எரிந்தது: கிண்டியில் பரபரப்பு

சென்னை கிண்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.


 
 
சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று, 38 மாணவர்களுடன் சென்னை மந்தைவெளியில் இருந்து பல்கலைக்கழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
அந்த பேருந்தை வினோத் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, கிண்டி ஹால்டா அருகே, சர்தார் பட்டேல் சாலையில் அந்த பேருந்து வந்துகொண்டிருந்தபோது திடீரென  பேருந்தின் என்ஜின் பகுதியிலிருந்து புகை வந்தது.
 
இதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக அந்த பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதைத் தொடர்ந்து, அதில் இருந்த மாணவர்கள் அனைவரும் அவசர, அவசரமாக கீழே இறங்கினர்.
 
இந்நிலையில், பேருந்து, தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீ மளமளவென  அந்த பேருந்து முழுவதும்  பரவியது.
 
இது குறித்து தகவல் அறிந்த கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
ஆயினும், பேருந்தின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து கிண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.