வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:01 IST)

உழவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்ட உழவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த  வேண்டும்; பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும்என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த குறுவை நெற்பயிர்கள்  தண்ணீரின்றி கருகியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் எம்.கே.ராஜ்குமார் என்ற உழவர் உயிரிழந்திருக்கிறார்.  அதிர்ச்சியில் உயிரிழந்த உழவர்  ராஜ்குமாரின்  குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டும்.
 
காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள உழவர்களில் பெரும்பான்மையினர் ராஜ்குமாரின் நிலையில் தான் உள்ளனர்.  இராஜ்குமார் மொத்தம் 50 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில்  குறுவை சாகுபடி செய்திருக்கிறார். அதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். நடவு நட்டு 80 நாட்கள்  ஆன நிலையில் கதிர் பிடிக்க வேண்டிய பயிர்கள் கருகத் தொடங்கியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான்  அவர் அதிர்ச்சியில்  உயிரிழந்திருக்கிறார்.  பெரிய விவசாயியான இராஜ்குமாரின் நிலைமையே இப்படி என்றால் கடன் வாங்கி ஓரிரு ஏக்கரில் பயிர் செய்து பாதிக்கப்பட்டவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
 
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு  பெரும் தோல்வி அடைந்து விட்டது. அதனால் ஏற்படும்  விளைவுகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்து, அதை பெற முடியாமல் தோல்வியடைந்து விட்டு,  கர்நாடகம்  வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் விடுவதை சாதனையாகவும்,  வெற்றியாகவும்  தமிழக அரசு கொண்டாடுவது  உழவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது.
 
காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் எந்த பயனும் ஏற்படாது; கருகும் பயிர்களைக் காக்க அந்த நீர் போதாது.  பெரும்பான்மையான பயிர்கள் கருகி விட்டதால் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள  உழவர்கள்  கருகி இறந்த பயிர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  நெற்பயிர்களைக் காக்க முடியாததால் லட்சக்கணக்கான உழவர்கள் கடனாளி ஆகிவிட்டனர்.  சேதமடைந்த குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு  வழங்குவதன் மூலமாக மட்டுமே  சிக்கலுக்கு தீர்வு காண முடியும். எனவே, சேதமடைந்த குறுவைப் பயிர்களுக்கு  ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.