வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (16:39 IST)

தாலியை தட்டிவிட்டு மணமகளுக்கு கட்ட முயற்சி! – திருமணத்தில் நடந்த திடீர் குழப்பம்!

சென்னையில் திருமணத்தின்போது தாலியை மணமகனிடம் இருந்து பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற நபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தண்டையார்பேட்டை முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை திருமண முன் தயாரிப்பு வேலைகள், பூஜைகள் முடிந்து மணமகன் தாலியை எடுத்து மணமகள் கழுத்தில் கட்ட சென்றபோது பக்கத்தில் இருந்த ஆசாமி தாலியை தட்டிவிட்டுள்ளார்.

பின்னர் தாலியை எடுத்து கொடுப்பது போல குனிந்து எடுத்தவர், சடாரென பாய்ந்து அதை மணமகளுக்கு கட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.


விசாரணையில் அந்த நபர் தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்றும், அவரும், மணமகள் ரேவதியும் நகைக்கடை ஒன்றில் பணியாற்றியபோது காதலித்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே திருமண பேச்சு எழுந்ததால் ரேவதி சதீஷின் காதலை முறித்துள்ளார்.

எப்படியாவது ரேவதிக்கு தாலி கட்டிவிட முடிவெடுத்த சதீஷ் மண்டபத்திற்குள் நுழைந்து சரியான தருணம் வரை காத்திருந்து தாலியை தட்டிவிட்டு தானே கட்ட முயன்று தோல்வியும் அடைந்துள்ளார்.