திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:14 IST)

எச்சரிக்கை கொடுத்தபோதும் முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை! – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழக  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மழை வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.


 
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த  கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அண்ணா நகர் பகுதிக்கு வருகை தந்து அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து திருநெல்வேலியில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

தென் தமிழகத்தில் அதிக அளவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தும், தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டினார். 3 நாட்களாக உணவு, குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும், போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.