ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ EVKS இளங்கோவன் காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக, இந்த தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணி பொருத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு தான் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள், ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், EVKS இளங்கோவனின் மகன் சஞ்சய்க்கு மேல்சபை எம்பி பதவி கொடுத்துவிட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட, கடந்த முறை போட்டியிட்ட தென்னரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல, ஈரோடு அதிமுக நிர்வாகியான வீரகுமார் மற்றும் ஆற்றல் அசோக்குமார் என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், விரைவில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் விரைவில் சூடு பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran