எடப்பாடி கையில் வைத்திருக்கும் கடைசி ஆயுதம் - ஆட்சியை காப்பாற்றுமா?
சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தினகரன் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பல முறை சந்தித்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மு.க.ஸ்டாலினும், தினகரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதுவும், திமுகவிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞர்களான கபில் சிபிலும், தினகரனுக்கு ஆதரவாக அபிஷேக் சிங்வியும் ஆஜராக உள்ளனர். வருகிற 20ம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுகிறது.
ஒரு பக்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் மற்றும் தமிழக அரசின் அடவகேட் ஜெனரல் விஜய் நாராயணன், சபாநாயகர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எப்படியேனும், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மறுபக்கம், சபாநாயகர் தனபால் மூலமாக தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உங்களை தகுதி நீக்கம் செய்யமாட்டோம். எனவே நேரில் வந்து விளக்கம் அளியுங்கள். அதை விட்டு விட்டு சட்டமன்ற நெறிமுறைகளை நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். எடப்பாடி பழனிச்சாமி விரைவில் இரட்டை இலையை மீட்டு விடுவார். அதற்கான வேலையில் அவரை ஈடுபடவிடுங்கள்” என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விளக்கம் அளிக்க எம்.எல்.ஏக்கள் நேரில் வந்தால், அவர்களை எப்படியும் சம்மதிக்க வைக்க முடியும் என எடப்பாடி தரப்பு நம்புவதாக தெரிகிறது.
இந்த திட்டத்தை அறிந்த தினகரன், எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள் என எம்.எல்.ஏக்களிடம் கூறி வருகிறாராம்.
எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் வரவில்லை எனில், அவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதை அறிந்துதான், தினகரனும் சட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும், 20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்குடாது என நீதிமன்றம் மூலம் செக் வைத்துள்ளது திமுக.
வருகிற 20ம் தேதி உயர் நீதிமன்றத்தில் கபில் சிபலும், அபிஷேக் சிங்வியும் ஆஜராகும் போது, தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அதுபற்றியே தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது எடப்பாடி அரசு.