அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மற்றும் சென்னை பகுதிகளில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்களின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் விடுதலையானார். பின்னர், மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று கருதப்படும் கொங்கு மெஸ் மணி மற்றும் சக்திவேல் ஆகியோரது வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை மற்றும் கரூர் ஆகிய இரு இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கான காரணம் தொடர்பான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran