1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (12:52 IST)

போதை பொருள் விற்பனை பணத்தில் தேர்தல் செலவா..? திமுக மீது எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!!

Edapadi
போதை பொருள் விற்பனை தொடர்பான பணத்தில் தான் திமுக நாடாளுமன்ற தேர்தல் செலவினை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  குற்றம் சாட்டினார்.
 
அதிமுக பொதுச் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி ஆளுநரிடம் எடப்பாடி மனு அளித்தார். 
 
இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும், தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பது குறித்தும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
 
ஏற்கனவே பலமுறை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், அப்போது தமிழகத்தில் போதை பொருள்  நடமாட்டம் குறித்து பேசி உள்ளதாகவும் எடப்பாடி தெரிவித்தார். போதை பொருள் கடத்தல் அண்மையில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,  மூன்றாண்டு காலமாக ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
 
பல்வேறு அரசியல் நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக் பண உதவி செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஒரு துளி போதை பொருள் கூட தமிழகத்தில் விற்பனையாக கூடாது என்ற நிலை இருக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளதாக எடப்பாடி தெரிவித்தார்.

 
போதை பொருள் விற்பனை தொடர்பான பணத்தில் தான் திமுக நாடாளுமன்ற தேர்தல் செலவினை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.