தேர்தல் தோல்வி எதிரொலி.! நிர்வாகிகளுடன் இபிஎஸ் நாளை ஆலோசனை..!!
மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதிமுக பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, சசிகலா அணி என 4 அணிகளாக பிரிந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டனர்.
இத்தேர்தலில் அதிமுகவும், கூட்டணி கட்சிகளும் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. 34 இடங்களில் போட்டியிட்டு 88 லட்சத்து 40 ஆயிரத்து 413 வாக்குகளை (20.46 சதவீதம்) பெற்றது. அதிமுக 7 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியினர் 2 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர்.
அதிமுக போட்டியிட்ட 34 தொகுதிகளில், 24 தொகுதிகளில் 2-ம் இடம், 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம் பிடித்தது. ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளுக்கும் குறைவாக பெற்றுள்ளது.
தற்போது அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் அதிமுக ஒன்றிணைப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் திமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய 3 பேரையும் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சசிகலா, ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருப்பது குறித்தும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் எடப்பாடி ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.