வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (14:11 IST)

அறிவில்லாத அரசாங்கத்தின் கீழ் மக்கள் இருப்பதால்தான் இவ்வளவு சிரமம்: ஜெயகுமார்

மத்திய அரசிடம் பணத்தை கேட்டு வாங்கவும் முடியவில்லை. ஏற்கனவே இருக்கும் பணத்தை செலவு செய்யவும் முடியவில்லை. அறிவில்லாத அரசாங்கத்தின் கீழ் மக்கள் இருப்பதால்தான் இவ்வளவு சிரமம்” என திமுக-வை கடுமையாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்ற நிலையில், இதில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜெயகுமார் பேசியபோது, கலைத்துறை, அரசியல் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் என்றும், இந்த எட்டாம் ஆண்டு நினைவு தினத்தில் தமிழகமே அழுது கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்தது குறித்து ஏவ வேலு வெளியிட்ட அறிக்கை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது என்றும், எங்கள் ஆட்சி காலத்தில் மூன்று மாதத்திலா பாலம் இடிந்து விழுந்தது? வடிவேலு கிணற்றை காணவில்லை என்பது போல பாலம் இருந்த சுவடே தெரியவில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

 "கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு என்று முதல்வர் கூறுகிறார்," என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுக்கு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திராவிட மாடல் ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும், நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டு வாங்கவும் தெரியவில்லை, இருக்கும் பணத்தையும் செலவு செய்ய தெரியவில்லை. அறிவில்லாத அரசாங்கத்தின் கீழ் மக்கள் இருப்பதால்தான் இவ்வளவு சிரமம் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran