1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (17:12 IST)

கருமுட்டை விற்பனை: தனியார் மருத்துவமனையில் விசாரணை

கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம் தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை. 

 
ஈரோட்டில் பெற்ற தாயே தனது பெண் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கும், கருமுட்டைகள் விற்பதற்கும் உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம், ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் மகள் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் நீண்ட காலமாக பழக்கம் இருந்து வந்துள்ளது.
 
ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பதற்கு அந்த பெண் தனது கருமுட்டைகள் மருத்துவமனையில் விற்று அதில் வரும் பணத்தை பயன்படுத்தியுள்ளார். நாளடைவில் தனது 16 வயது மகளின் கருமுட்டைகளையும் மருத்துவமனைக்கு விற்க தொடங்கியுள்ளார். இதற்காக சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டு மற்றும் சான்றிதழ்கள் தயார் செய்துள்ளனர்.
 
மேலும் அந்த பெண்ணின் உல்லாச காதலன் அடிக்கடி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமியின் 12 வயது முதலே இந்த கொடுமை தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்த சிறுமி சூரம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டை அடைந்துள்ளார்.
 
அங்கு சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியவர அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸர் சிறுமியின் தாய், தாயின் காதலன் மற்றும் கருமுட்டை விற்க ஏஜெண்டாக செயல்பட்ட பெண் என 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த ஏஜெண்ட் பெண்ணிடம் இதுபோன்று மேலும் பல சிறுமிகளின் கருமுட்டைகள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம் தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் சிறுமியிடம் விசாரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சேலம் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.