1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (11:03 IST)

அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவிற்கு வருமா?

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது. 
 
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது. 
 
தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறைந்த பேருந்துகளே இயக்கப்படும். மேலும், அனுபவின்மையால் அந்த ஓட்டுனர்கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

 
வருகிற 13ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் வருகிற 12ம் தேதி தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அந்நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜய்பாஸ்கருடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.