1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (13:54 IST)

அவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்து போனவர்கள்.. நாராயணசாமி தான் ஒரிஜினல் அதிமுக வேட்பாளர்: ஈபிஎஸ்

தேனி தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இருந்து சென்றவர் தான் என்றும் அதேபோல் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து சென்றவர்தான் என்றும் ஆனால் இந்த தொகுதியில் அதிமுகவின் ஒரிஜினல் வேட்பாளர் நாராயணசாமி தான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தேனியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, அமமுக சார்பில் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதன் என நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கே தீவிரமாக பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது ’தேனியில் ஒரிஜினல் அதிமுக வேட்பாளர் நமது நாராயணசாமி தான், மற்ற இருவரும் அதிமுகவிலிருந்து போனவர்கள், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றால் ஒரிஜினல் அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார் 
 
உண்மையில் அவர்கள் இருவரும் நன்றி உடையவர்களாக இருந்திருந்தால் அதிமுகவிலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் 14 ஆண்டுகள் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்த டிடிவி தினகரன் தற்போது திடீரென உங்களை தேடி வந்துள்ளார் என்றும் சுய லாபத்திற்காக வரும் அவரை விரட்டியடியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
பாஜகவை அன்று விமர்சனம் செய்த தினகரன் தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பச்சோந்தி என்பதை நிரூபித்துள்ளார் என்றும் இவர்களை நம்பி எப்படி நீங்கள் ஓட்டு போடலாம் என்று தெரிவித்தார். மேலும் திமுக வேட்பாளரையும் குக்கரில் போட்டியிடும் வேட்பாளரையும் இந்த தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
 
Edited by Mahendran