Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:17 IST)
எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!
எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!
தமிழக முதலமைச்சராக சசிகலாவும், ஒ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டிருந்த வேளையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்துள்ளது.
இதனையடுத்து கூவத்தூரில் சசிகலா தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை ஆளும் கட்சி தலைவர் தான் முதலமைச்சராக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க வைக்குமாறு தமிழக ஆளுநருக்கு கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களின் ஒப்புதல் பெறப்பட்ட கடிதம் அனுப்பப்படும். ஏற்கனவே ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் சர்ச்சையில் இருக்கும் போது இந்த புதிய முதலமைச்சருக்கான எம்எல்ஏக்கள் ஒப்புதல் பெறப்பட்ட கடிதத்தை ஆளுநர் எப்படி பரிசீலிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாகவே சசிகலாவின் தேர்வு எடப்பாடி பழனிச்சாமியாகவே இருந்தது. ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த போது கூட காவிரி விவகாரத்தில் முதல்வருக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியே டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
பெரும்பாலும் ஆளுநர் சிறப்பு சட்டசபையை கூட்டி ஓ.பன்னீசெல்வத்தை பெரும்பான்மையையே நிரூபிக்க சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் சசிகலா.