எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் - மு.க.ஸ்டாலின் கிண்டல்
தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரித்து விட்டு, பதவியை பறி கொடுத்து விட வேண்டாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ற்கும், சசிகலா தரப்பிற்கும் இடையே சில நாட்களாக நிகழ்ந்த போர் நேற்று முடிவிற்கு வந்தது. ஒருவழியாக, எடப்பாடியை ஆட்சி அமைக்க ஆளுநர் நேற்று அழைத்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் அவருக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். மேலும், நாளை சட்டப்பேரவை கூட்டப்படுகிறது. அதில் எடப்பாடி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நாளை சட்டசபைக்கு வரும் போது, எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்க வேண்டாம். ஏனெனில் அவரின் பதவி பறிபோய்விடும்’ என கிண்டலடித்தார்.
சட்டசபையில், மு.க.ஸ்டாலினை பார்த்து ஓ.பி.எஸ் சிரித்ததற்காகத்தான் அவரிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டதாக சசிகலா தெரிவித்திருந்தார். எனவேதான், மு.க.ஸ்டாலின் இப்படி கிண்டலடித்துள்ளார்.