திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்!.. எடப்பாடி பழனிச்சாமி புகார்...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆளுநர் ரவியை சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வழங்கினார். அவருடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி. திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இருந்தார்கள். அதன்பின் வெளியே வந்த பழனிச்சாமி நிருபர்களிடம் பேசியதாவது.
ஆளுநரை சந்தித்து 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக செய்த ஊழல் பட்டியலை கொடுத்திருக்கிறோம். கடந்த நாலரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலும் திமுக செய்த ஊழலை ஆதாரத்துடன் விளக்கினோம். உரிய ஆதாரம் இருப்பதால் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம். கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக அரசு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழகத்தை கடனில் ஆழ்த்தியிருக்கிறது.
56 மாதங்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். இதுவரை 4 லட்சம் கோடி கடன் வாங்கி ஊழல் செய்திருக்கிறார்கள். சபரீசன், உதயநிதி ஆகியோர் முப்பதாயிரம் கோடி வைத்துக்கொண்டு என்ன செய்து என்று தெரியாமல் முழிக்கிறார்கள் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ கூட வெளியானது.
ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்றால் நாலரை வருடத்தில் எவ்வளவு கோடி கொள்ளை அடித்திருப்பார்கள்?.. திமுக விஞ்ஞான முறையில் ஊழல் செய்து வருகிறது.. நகராட்சி, சுரங்கத்துறை, டாஸ்மார்க் துறை, பத்திரப்பதிவு, தொழில் துறை, வேளாண்மை, விளையாட்டுத்துறை, உயர்கல்வி என எல்லா துறைகளிலும் பல்லாயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஆதாரத்துடன் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.