செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (18:26 IST)

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

Richi Street
சென்னையில் பட்டப்பகலில் யூட்யூபரை மிரட்டி போதை ஆசாமிகள் கேமராவை பிடுங்கி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சமீப காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து பலரும் புகார் செய்து வரும் நிலையில், சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகரில் ரவுடியிசம் அதிகரிப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது ஒரு யூட்யூபருக்கு ரவுடிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூட்யூபில் A2D என்ற சேனல் வைத்துள்ள நந்தா என்பவர் கணினி, ஸ்மார்ட்போன்கள் குறித்த வீடியோக்களை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு ஸ்மார்ட்போனுக்காக உதிரி பாகங்களை வாங்க சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் பகுதிக்கு சென்றபோது, வீடியோ எடுத்துக் கொண்டே சென்ற அவரை வழிமறித்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த கேமரா உள்ளிட்ட சாதனங்களை பறித்துக் கொண்டுள்ளனர். பட்டப்பகலிலேயே ஆட்டோவில் அமர்ந்து அவர்கள் மது அருந்திக் கொண்டிருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பின்னர் யாரோ பேசி அவர்களுக்கு மறுபடியும் கேமராவை வாங்கி கொடுத்த நிலையில் அவர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்காமல் வந்துள்ளனர். ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ள நிலையில் பலரும் சென்னை காவல்துறையை டேக் செய்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சென்னை மாநகர காவல் “தகுந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K