1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (16:33 IST)

பிரதமர் மோடியின் சென்னை வருகை - ட்ரோன் பறக்க தடை!

சென்னையில் 2 நாட்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதால் அந்த 2 நாட்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.