1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (14:39 IST)

இந்தியாவுக்கு இலங்கை செய்த துரோகம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

Ramadoss
இந்தியாவுக்கு இலங்கை செய்த துரோகம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்!
 
சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும்; இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு!
 
இலங்கையின்  வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை  இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்!
 
இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை  திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!