வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (11:21 IST)

கம்போடியாவில் 400 தமிழர்களுக்கு சித்ரவதை: டாக்டர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்!

ramadoss
கம்போடியாவில் 400 தமிழர்களுக்கு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 பேர் அங்குள்ள சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாகவும், பட்டினி, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுதல் உள்ளிட்ட கொடுமைகளை அவர்கள் அனுபவிப்பதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்த இளைஞர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
 
தாய்லாந்தில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மியான்மருக்கு கடத்தி கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தமிழர்களில் இதுவரை 13 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக கம்போடியாவிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, கொடுமைபடுத்தப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை!
 
பல லட்சம் பணம் செலுத்தி வேலை தேடி கம்போடியாவுக்கு சென்ற தமிழர்களை, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே சட்டவிரோத கும்பலிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. வேலை தருவதாகக் கூறி தமிழர்களை அழைத்து, கடத்தி விற்பதை ஒரு கும்பல் தொழிலாகவே செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது!
 
தமிழர்களை கடத்தி வைத்துள்ள சட்டவிரோத கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அவர்களிடம் பேச அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அஞ்சுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள்,  அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன!
 
கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்.  அவர்களை இங்கிருந்து அனுப்பியவர்கள், சட்டவிரோத கும்பலுக்கு விற்றவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்!
 

Edited by Mahendran