வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (10:50 IST)

இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்..! டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!

TM Krishna Stalin
அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகியுள்ள டி.எம்.கிருஷ்ணாவுக்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல என்றும் பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
 
கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது என்றும் அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம் என்றும் விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.