வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (18:55 IST)

"அடையாளத்தை இழந்துவிடக்கூடாது" - உணர்ச்சி பொங்கும் ஜி.வி.பிரகாஷ்

உலகின் மூத்த மொழி தமிழ். நம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.


 

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.

காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படுவதாகவும், அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அறிவிக்கைக்கு, இடைக்கால தடை விதித்தது. மேலும், கடந்த ஓராண்டாக இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

இதனால், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தலாம் என்று போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசைகள் நிராசையாக ஆனது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து சேலம் ஆத்தூர் தளவாய்பேட்டையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி காலையில் போராட்டம் நடத்தினார்.

அலங்காநல்லூரில், கைதானவர்களை விடுவிக்கக் கோரி காலை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்திலும் ஜி.வி. பிரகாஷ் கலந்துகொண்டுள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.பி.பிரகாஷ், ”ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும். பீட்டாவைத் தடை செய்யவேண்டும். இங்குள்ளவர்கள் அனைவரும் இளைஞர்கள். உலகின் மூத்த மொழி, தமிழ். நம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது” என்றார்.