ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 22 மே 2016 (15:47 IST)

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு முன்னதாகவே வாக்குப் பதிவு? - நீதிமன்றம் அறிவுரை

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு ஜூன் 13-ஆம் தேதிக்கு முன்னதாகவே வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
 

 
பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் தொடர்பாக எழுந்த புகார்களை தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வேட்பாளர்கள் உள்பட 5 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
‘இந்த இரு தொகுதிகளிலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ள நிலையில், வெறும் 7 நாட்கள் மட்டும் தேர்தலை தள்ளிவைப்பதால் எந்த பயனும் இல்லை; முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளர்களை தகுதி இழக்கச் செய்துவிட்டு, புதிதாக இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று அவர்கள் கூறியிருந்தனர்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த இரு தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரத்துக்கு தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
 
இதனிடையே அன்று இரவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு ஜூன் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 23ஆம் தேதியே வாக்குப்பதிவை நடத்தவேண்டும் என்றும் ஜூன் மாதம் 13ஆம் தேதி வாக்குப்பதிவு என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
 
திமுகவின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட நீதிமன்றம், பிற்பகலில் விசாரணை நடத்தியது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு தொகுதிகளின் வாக்குப் பதிவு தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஜூன் 13-ம் தேதிக்கு முன்பாக நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
 
மேலும், நேர்மையாக தேர்தலை நடத்த இந்த கால அவகாசம் தேவை என்றும், தேர்தல் ஆணைய நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிட்டால் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் வாதிட்டார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்ற திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
 
மேலும், இதுதொடர்பாக மே 27ஆம் தேதிக்குள் அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்டு தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்க வேண்டும் என தங்களின் உத்தரவில் தெளிவுபடுத்தினர்.