புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (17:44 IST)

மருத்துவமனையில் உறவினர்கள் ; திரண்ட திமுக தொண்டர்கள் : நிலவரம் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட உறவினர்களும், மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களும் கூடியுள்ளதால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு கடந்த 10 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயோதிகம், நுரையீரல் தொற்று, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக தொற்று, இரத்தத்தில் தொற்று என பல நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறார். எனினும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்து வந்தது. 
 
ஆனால், கடந்த 4 நாட்களாக மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.
 
இந்நிலையில்தான், கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். இன்று காலை ஸ்டாலின் வந்தார். அவரை தொடர்ந்து அழகிரி உள்ளிட்ட மற்ற உறவினர்கள் அங்கு வந்தனர். கடந்த 10 நாட்களாக மருத்துவமனைக்கு வராத கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை கருணாநிதியின் மூத்த மகன் தமிழரசு கோபாலபுரம் இல்லத்திலிருந்து அழைத்து வந்தார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதால், உடலில் தட்டணுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறதாம். இதனால், அவருக்கு அளிக்கப்படும் மருந்துகள் தாமதமாகவே வேலை செய்கிறது எனக்கூறப்படுகிறது.  எனவே, அவருக்கு எதுபோன்ற சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில், இன்று மாலை மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆர்.ராசா, அழகிரி போன்றோர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அதேபோல், மருத்துவமனை முன்பு கூடும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எழுந்து வா தலைவா என அவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஏறக்குறைய கடந்த ஞாயிற்றுக்கிழமை என்ன சூழ்நிலை நிலவியதோ அதே நிலை காவேரி மருத்துவமனை முன்பு ஏற்பட்டுள்ளது. இதனால், காவேரி மருத்துவமனை முன்பு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எனவே, விரைவில் மருத்துவமனை சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.