1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (13:52 IST)

மச்சான் முன்னேற்ற கழகம்: மமுக-வாக மாறும் தேமுதிக..??

தேமுதிகவை மமுக என மாற்றி விடலாம் என திமுக பிரமுகர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இம்முறை தேமுதிக தனித்து நின்று போட்டியிட ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் அதிமுக, திமுக இரு கட்சிகளும் கூட்டணிக்கு தங்களோடு பேசி வருவதாகவும், தேமுதிக ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்றும் பேசியிருந்தார்.
 
இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ் தனது ட்விட்டரில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த் காலில் விழுவது போன்ற சித்திரத்தை பதிவிட்டார். இதற்கு கண்டனம் எழுந்ததும் உடனே அந்த பதிவை நீக்கிட சுதீஷ் தான் அதை தவறான நோக்கத்தில் பதியவில்லை என விளக்கம் அளித்தார். 
இந்நிலையில் இது குறித்து திமுக தரப்பில் கண்டனங்களும் எழுந்தது. அந்த வகையில் திமுகவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பிரபல சேனலுக்கு அளித்த பிரத்கேய பேட்டியில், இந்திய அரசியலில் மூத்த தலைவராக திகழ்ந்த கருணாநிதியை இப்படி தரக்குறைவாக சித்தரித்த கார்ட்டூனை வெளியிட்டுள்ளதை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
 
கடந்த காலங்களில் கூட்டணியில் இணையவில்லை என்பதால் தேமுதிக மீது திமுகவுக்கு எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. அவர்கள்தான் கார்ட்டூனை வைத்து தற்போது திமுகவை சீண்டுகிறார்கள். கருணாநிதி மீது விஜயகாந்த் எப்போதும் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர். 
 
எனவே அவரது ஒப்புதலுடன் 2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி முடிவாகியிருக்க வாய்ப்பில்லை. சுதீஷும், அவரது சகோதரியும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்திருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவேதான் நாங்கள் தேமுதிக என்ற கட்சியின் பெயரை "மச்சான் முன்னேற்ற கழகம்" என்று மாற்றிவிடலாம் என்று கூறி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.