திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (21:30 IST)

திமுக மாநாடு: நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்த ‘Drone Show'- உதயநிதி ஸ்டாலின்

Drone Show
திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் பிரமாண்டமாக நடக்கிறது.

இதில், பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் வந்தடைந்தனர்.

அங்கு கே.என். நேரு சார்பில் இருவருக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகின்றனர். பின்னர்,  சென்னையில் இருந்து புறப்பட்ட சுடர் தீபம் ஒப்படைக்கப்பட்டது.

100 இருசக்கர வாகனங்களுடன் சென்னையில் இருந்து தொடங்கிய டி.எம்.கே ரைடர்ஸ்-ன் 1000 இருசக்கர வாகனங்களாகப் பெருகி இன்று மாலை மாநாட்டுத் திடலை வந்தடைந்தது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக  பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்து, திமுக தலைவர்களின் உருவங்கள் அதில் இடம்பெற்றன.
 
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளதாவது:
 
''இயக்கத்தின் இதயமான இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை கூடவுள்ள நிலையில், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுத்திடலில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
முக்கியமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், நமது திராவிட இயக்க கொள்கைப் பயணத்தை 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த ‘Drone Show’, நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது. 
 
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என நம் தலைவர்களின் உருவங்கள் - நம் தலைவர்கள் கட்டிக்காத்த  தமிழ்நாட்டின் வரைப்படம் - நம் உதயசூரியன் சின்னம் - கழக இளைஞரணியின் இலட்சினை போன்றவற்றை வானில் ஜொலிக்கச் செய்த ‘Drone Show’ நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்!'' என்று தெரிவித்துள்ளார்.