திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (08:44 IST)

தனிமரமான தேமுதிக; பிரேமலதாவுக்கு சீட் – என்ன செய்யப்போகிறது ?

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தேமுதிக இப்போதுதான் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைய இருக்கிறது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் இதில் காங்கிரஸுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் தொகுதி உள் பங்கீடு செய்து கூட்டணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் அதிமுக, பாஜக மற்றும் பாமக இணைந்த ஒரு கூட்டணி உருவாவதற்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. இக்கட்சிகளை சார்ந்தவர்கள் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களைப் பேசி வருவதாகவும் எல்லாம் சரியாக அமைந்தால் விரைவில் கூட்டணிப் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிகத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன்றாகவும் 2011 -2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவு இருந்த தேமுதிக தற்போது தனித்து விடப்பட்ட சூழ்நிலையில் உள்ளது. இந்த இரண்டுக் கூட்டணிகளில் இருந்து தேமுதிக வுக்கு எந்த அழைப்பும் வந்ததாகத் தெரியவில்லை. அதற்கு தேமுதிக வின் சமீபத்தைய அரசியல் செயல்பாடுகளேக் காரணம். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை, தமிழக அரசியலில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது போன்றவையே. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மரணத்திற்குப் பின்னான அரசியல் வெற்றிட சூழ்நிலையை தேமுதிக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதற்கிடையில் கமலின் அரசியல் கட்சி, ரஜினியின் அரசியல் வருகை என ஊடகங்களின் கவனமும் மக்களின் கவனமும் தேமுதிக பக்கம் செல்லாமலே இருப்பதற்கு முக்கியக் காரணங்களாகிவிட்டன.

இதற்கிடையில் தேமுதிக சார்பில் கூட்டணித் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார். இக்குழுவிற்குத் தலைவராக எல்.கே.சுதீஷும் உறுப்பினர்களாக டாக்டர் வி இளங்கோவன், மோகன் ராஜ. பார்த்த சாரதி, ஏ.எஸ். அக்பர் ஆகியோரை நியமித்துள்ளார்.

எந்தக் கட்சியோடுக் கூட்டணி அமைத்தாலும் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மதுரைத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்பது தேமுதிக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் தலைப்புச் செய்தியாகும். எனவே அதற்கு ஒத்துவரும் கட்சியோடு மட்டுமேக் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறதாம் தேமுதிக.