புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (16:39 IST)

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

Annamalai
மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும், செய்வாரா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோவை, அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் திமுக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் வெகுவாக குறைந்து விட்டதாக, தனக்குத் தானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், வாரம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று வீண் விளம்பரமும் செய்திருந்தார் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
 
இவர்கள் நடத்திய ஆய்வின் லட்சணம்தான், கள்ளச்சாராயத்தால் இன்று 55 உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம் என்று அவர் விமர்சித்துள்ளார். இத்தனை நடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் முதல்வர் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
 
திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் பாஜகவை சேர்ந்த சகோதர சகோதரிகளைக் கைது செய்து முடக்குவதில் காட்டும் அக்கறையைச் சிறிதேனும், கள்ளச்சாராய ஒழிப்பில் காட்டியிருந்தால், பல குடும்பங்கள் இன்று ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்காது என்று கூறியுள்ளார்.

 
இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும். செய்வாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.