பொள்ளாச்சி விஷயத்தில் அமமுக வேடிக்கை பார்க்காது – தினகரன் ஆவேசம் !

Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (11:30 IST)
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகளுக்காக அமமுக மாணவர்களோடு கைகோர்த்து போராடும் என தினகரன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன. ஆனால் அதிமுக அரசு இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதுதொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள திமுக , விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளன. இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது. இது சம்மந்தமான அறிக்கையில் ‘"பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக் கோரி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட அடக்குமுறையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது, தமிழகத்தையே அதிர வைத்திருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சந்தேகத்தை அதிகப்படுத்தி வருகின்றன.

கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன பிறகும் குற்றம்சாட்டப்பட்டவர்களை இதுவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக சொன்னபிறகு சிபிசிஐடி அதிகாரிகள் திடீரென போய் விசாரிக்கிறார்கள். 'அரசியல் வாரிசுகளுக்கு 100% தொடர்பில்லை' என்று கோவை எஸ்பி பேட்டி கொடுத்தபின்னர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 'பார்' நாகராஜ் இருக்கும் புதிய வீடியோக்கள் வெளியாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

மர்மங்கள் நிறைந்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப்பதை விட்டுவிட்டு, தமிழக அரசு காவல்துறையை ஏவி மாணவர்களைத் தாக்குவது, கல்லூரிகளை மூடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது, மாணவர்களிடம் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடும்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :