1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2017 (13:45 IST)

பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை சந்திக்கும் தினகரன்....

தமிழக அரசியலில் பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்கிறார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா. அதன்பின் அதிமுகவின் தலைமையாக தினகரன் மாறினார்.
 
என்னதான் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும், அவரை பின்னால் இருந்து தினகரனே இயக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நான்தான் நிற்பேன் என அங்கு போட்டியிட்டார் தினகரன். ஓ.பி.எஸ் அணி கொடுத்த குடைச்சலில் இரட்டை இலை சின்னமும், அதிமுக என்ற கட்சி பெயரையும் பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் அணி பணப்பட்டுவாடா செய்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால், விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலும் ரத்தானது. 
 
மேலும், வருமான வரித்துறையினரின் லிஸ்டில் முதல்வர் உட்பட தமிழக முக்கிய அமைச்சர்கள் பெயர் இருக்கிறது. அடுத்த சோதனை எங்கு நடக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என தமிழிசை உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மன்னார்குடி உறவினர்களை ஒதுக்கி விட்டு செயல்பட்டு வந்தார் தினகரன். இதனால் அவர் மீது சசிகலா கடுமையான அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. 
 
அந்நிலையில், கட்சியை காப்பற்றவும், ஆட்சியை தக்க வைப்பதற்காகவும் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்க, பல மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர் எனவும், இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியிடம் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்தி வெளிவந்தது.
 
இந்நிலையில், தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற, சுகேஷ் சந்தர் என்ற இரட்டைத் தரகரை தினகரன் தரப்பு அணுகியதாகவும், அதற்கு ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டு, ரூ.1.30 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சுகேஷ் சந்தரை டெல்லி போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். மேலும், தினகரன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் நாளை சென்னை வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
எனவே, கட்சியை தினகரன் காலி செய்து விடுவார் என்கிற கோபத்தில் சசிகலா இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று பெங்களூர் சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேச உள்ளார் தினகரன். 
 
இந்த சந்திப்பிற்கு பின் தமிழக அரசியலில் ஏதும் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...