ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை பொது மேடையில் வலுக்கட்டாயமாக விலக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மேடையில் ஆணை பெற வந்த பெண் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த நிதீஷ் குமார், திடீரென அவரது அனுமதியின்றி தலையில் இருந்த ஹிஜாப்பை இழுத்து விலக்கினார். இந்த செயல் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் முதல்வருக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கைசர்பாக் காவல் நிலையத்தில், சமாஜவாதி கட்சியின் மூத்த நிர்வாகி சுமையா ராணா, நிதீஷ் குமாருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் முதல்வர் நடந்துகொண்டதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிதீஷ் குமாருக்கு, இந்த ஹிஜாப் விவகாரம் மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran