ராகுல் காந்தியை ஏமாற்றினேனா ... நாராயணசாமி பதில்!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2021 (13:03 IST)
நாராயணசாமி தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியதாக பலரும் தெரிவித்ததால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். 

 
காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். 
 
புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று புதுச்சேரி வந்தார். அப்போது மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமியும் உடன் இருந்தார். 
 
அப்போது ஒரு பாட்டி ‘மீனவ மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறோம். புயல் பாதிப்பின் போது யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை, ஏன் அவரே (நாராயணசாமி) வரவில்லை ‘ எனக் கூறினார். அதை ஆங்கிலத்தில் ராகுலுக்கு மொழிபெயர்த்த நாராயணசாமி ’புயல் பாதிப்பின் போது நான் வந்து அவர்களைப் பார்த்ததைப் பற்றி கூறுகிறார்’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 
 
இது தொடர்பாக நாராயணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், நிவர் வந்த பொழுது முதல்வர் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வந்து பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் கூறியபொழுது, நாராயணசாமி அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில் ராகுல்காந்தி அவர்களிடம் நான் வந்தேன் என்று மாற்று மொழியில் பதிலளித்தார். அவர் தவறாக மொழி பெயர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :