திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:49 IST)

ஜெ.வும் சசிகலாவும் அப்பல்லோவில் பேசும் வீடியோ வெளியிடுவேன் : திவாகரன் மகன் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சசிகலாவுடன் உரையாடிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியிடுவேன் என சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பின் மரணமடைந்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது அவரை சந்திக்க எவரையும் சசிகலா தரப்பினர் அனுமதிக்கவில்லை. அதேபோல், அவர் சாப்பிட்டார், மருத்துவர்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார், செய்தித்தாள் படித்தார், தொலைக்காட்சி பார்த்தார் என பல செய்திகள் வெளியானது. ஆனால், அவரது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. எனவே, அவரின் மரணம் ஒரு மர்ம மரணமாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.
 
ஜெ.வின் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். சசிகலா தரப்பிற்கு எதிராக களம் இறங்கிய ஓ.பி.எஸ் அணியும் ஜெ.வின் மரணத்தையே பிராதனமாக கையில் எடுத்தனர். ஆனால், ஜெ.வின் மரணம் குறித்து எந்த ஒரு உண்மையையும் சசிகலா தரப்பினர் இதுவரை நேரிடையாகவோ, வெளிப்படையாகவோ எதுவும் தெரிவிக்கவில்லை.


 

 
இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை...
 
காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள் அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்.
 
இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்...
 
சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார். உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக தலைவி சின்னம்மா இருவரும் மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...?
 
P.H.பாண்டியன்,மனோஜ்பாண்டியன், இவர்களை என்ன செய்யலாம்...?
 
என அவர் கேள்வி எழுப்பியுள்ளர். இந்த விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பல்லோவில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் அவர் வசம் இருக்கிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது வேறு யாரேனும் கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர் திவாகரனின் மகனே கூறியிருப்பதால், இதில் சில உண்மைகள் அடங்கியிருக்கலாம் என கருத்துகள் உலா வருகிறது.