செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (19:05 IST)

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது- தமிழ்நாடு காங்கிரஸ்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு, குற்றவியல்  அவதூறு வழக்கில்    இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது குஜராத் உயர்நீதிமன்றத்தின்  இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை  நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் அதிரடியாக பல கேள்விகளையும் எழுப்பியது.
 
இந்த நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகி பாராளுமன்றத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை  உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, இதை   நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

‘’மக்களவையில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உரையாற்றும் போது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி பேசிய 20 நாட்களில் சூரத் நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற அவமதிப்பு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டுபதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்றைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்களவை உறுப்பினராக மீண்டும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள அனைவரும் பெருத்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் நீதி வழங்கியதன் மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மோடி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய அடியாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலாக மக்களவையில் தலைவர் ராகுல்காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது. இது இந்தியாவின் நீதி பரிபாலனத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.