எந்த பிரச்சினையும் இல்லாமல் முடிந்த புத்தாண்டு! – மக்களுக்கு டிஜிபி நன்றி!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடந்ததற்காக டிஜிபி சைலேந்திரபாபு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று புத்தாண்டில் பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னையில் இரவில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு “ஆங்கில புத்தாண்டு தினம், தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின்போது சாலை விபத்துகள் மற்றும் இதர அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவும் தமிழக காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஓரிரு சாலை விபத்துகள் மற்றும் ஓரிரு சச்சரவுகள் தவிர தமிழகம் முழுவதும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடந்து முடிந்தன. போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.