புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (14:42 IST)

நீங்க எதாவது எழுதுனா எங்களை விரட்டிடுவாங்க..! – பத்திரிக்கையாளர்களிடம் கெஞ்சிய கர்ப்பிணி பெண்!

Child and Mother
நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும், நிறைய மாத கர்ப்பிணி, வயிற்று வலியால் என்எல்சி மருத்துவமனை முன்பே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய்


 
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில் உள்ள பொதுவெளியிலும், பேருந்து நிலையத்திலும் நாடோடியாக, ஏராளமானோர் இருக்க இடமின்றி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறு  நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான்  ஸ்ரீதர் - மேரி தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியையும், இரண்டு வயதுக்கு கொண்ட தனது பெண் பிள்ளையும் காப்பாற்றுவதற்காக,   ஆந்திராவில் கூலி வேலை செய்து வருகிறார் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் மனைவியான மேரியும், அவரது பெண் குழந்தையும், நெய்வேலி நகரத்தில் சுற்றி திரிந்து, சாலை ஓரத்தில் கிடைக்கின்ற பிளாஸ்டிக் பொருட்களை  சேகரித்து, அதனை விற்பனை செய்து, வருகின்ற வருமானத்தில் சாப்பிட்டுக் கொண்டு, சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய பேருந்து நிலையங்களில் தங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, என்எல்சி மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.

அப்போது பிரசவம் பார்க்கும் மருத்துவர் இல்லை என்று ஊழியர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் என்எல்சி மருத்துவமனையை விட்டு,  வெளியே வரும்போது, திடீரென வலி ஏற்பட்டு, மருத்துவமனை வரண்டா பகுதியில், மேரி கீழே விழுந்து உள்ளார்.

அப்போது பணிக்குடம் உடைந்து, ரத்த வெள்ளத்தில் குழந்தை  பிறந்ததுள்ளது. இதனைப் பார்த்த பலர் கூச்சலிடவே, அதன் பின்பே என்எல்சி மருத்துவமனை செவிலியர்கள், ஓடி வந்து தரையில் கிடந்த அழகான பெண் குழந்தையையும்,  மேரியையும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அதன் பின்னர் என்எல்சி மருத்துவமனை ஊழியர்கள், பத்தாயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அப்பணத்தை செலுத்த முடியாத மேரி, குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே, மருத்துவமனையில் இருந்து, தனது குழந்தையை தூக்கிக் கொண்டு எப்போதும் போல, நாடோடியாக பேருந்து நிலையத்தில், தஞ்சம் அடைந்துள்ளார்.

மேலும்  குழந்தை பிறந்து 6 மணி நேரம் கூட ஆகாத நிலையில், என்எல்சி மருத்துவமனைக்கு, பணம் கட்ட முடியாததால், பச்சை உடம்புக்காரியான மேரி,  கொசுக்கள், ஈக்கள் கொண்ட பேருந்து நிலையத்தில், தனது பெண் குழந்தையை இரண்டு குடைகள் கொண்டு, பாதுகாத்து வருகிறார்.

மேலும் பிறந்த குழந்தையை, மற்றொரு குழந்தை, பேருந்து நிலையத்தில்  முத்தமிடும் காட்சி,  பார்ப்போரை கண்கலங்க செய்தது.

அப்போது செய்தியாளர்கள் சென்று வீடியோ எடுக்க முற்பட்டபோது, கண்களில் கண்ணீர் மல்க, எதுவும் செய்ய வேண்டாம் அண்ணா, நீங்கள் ஏதாவது செய்தி போட்டால், எங்களை இங்கிருந்து துரத்தி விடுவார்கள் என, பெ பிறந்த குழந்தையை, கைகளில் வைத்துக்கொண்டு கையெடுத்து கும்பிட்டதால், கனத்த இதயத்துடன் செய்தியாளர்களும் திரும்பினர்.

வீடு வாசல் இல்லாமல், நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, தனக்குப் பிறந்த குழந்தையை, மழை வெயில், பனி, கொசு, ஈக்கள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், குழந்தையை காப்பாற்றி வரும் தாய்க்கு,  என்எல்சி நிர்வாகம் உதவி கரம் நீட்ட வேண்டும் எனவும், பிறந்த குழந்தை உடல் நலம், பெற்றெடுத்த தாயின் உடல் நலம் உள்ளிட்டவைகளை,  பேணி காக்க போதிய பணம் இல்லாததால், பேருந்து நிலையத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு, மாவட்ட நிர்வாகமும் சமூக ஆர்வலர்களும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.