இன்று உருவாகிறது அசானி புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!!
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும்.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மாலை வட ஆந்திரா - ஒடிசா கடற்கரைக்கு சென்று ஒடிசா அல்லது ஆந்திராவில் கரையை கடக்காமல் கடற்கரைக்கு இணையாக பயணிக்கும்.
இந்த புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். மேலும் பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன், புதுவை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.