சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!
கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 5ம் தேதி தேனியில் வைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அப்போது அவரது காரில் ஆய்வு மேற்கொண்ட போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2 நாட்கள் விசாரணை முடிந்து இன்று, மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீசார் விசாரணையின் போது துன்புறுத்தினரா என நீதிபதி கேட்டதற்கு, தான் துன்புறுத்தப்படவில்லை என சவுக்கு சங்கர் பதிலளித்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் பெண் போலீசார் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.