வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (14:44 IST)

வேறு நோயாளிக்கு ஆக்ஸிஜன் அளித்ததால் ராஜா மரணமா? – சர்ச்சைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

கடலூரில் ஆக்ஸிஜன் பெற்று வந்த நோயாளியிடமிருந்து எடுத்து வேறு நோயாளிக்கு தந்ததால் அவர் இறந்ததாக வெளியான சர்ச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் கடலூரில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்கனவே ஆக்ஸிஜன் வழங்கப்பட்டிருந்த ராஜா என்ற நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் எந்திரத்தை எடுத்து சென்றதாகவும், அதனால் ராஜா உயிரிழந்ததாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்த விரிவான விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மணிகண்டன் என்ற நோயாளி மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது ராஜா தனது ஆக்ஸிஜன் முக கவசத்தை கழற்றி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார் எனவும், அப்போது மணிகண்டனுக்கு வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் எந்திரத்தின் பின் சரியா பொருந்தாததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜாவின் ஆக்ஸிஜன் எந்திரத்தை மணிகண்டன் உயிரை காக்க அளித்து விட்டு, அங்கிருந்த ஆக்ஸிஜன் எந்திரத்தை ராஜாவுக்காக பொருத்தி தயார் செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் சாப்பிட்டு கொண்டிருந்தபோதே ராஜா மாரடைப்பால் இறந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.