தலப்பாக்கட்டிப் பெயரைப் பயன்படுத்த தடை – நீதிமன்றம் உத்தரவு !
தமிழகத்தில் தலப்பாக்கட்டி என்ற பெயரில் பல கடைகள் செயல்படுவதாகவும் அவற்றிற்குத் தடை விதிக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் அசைவ உணவுப் பிரியர்களுக்கு மத்தியில் பிரசித்தி பெற்ற உணவகத்தில் ஒன்று தலப்பாக்கட்டி பிரியாணிக் கடை. இதன் தனித்துவமான ருசி காரணமாக தமிழகமெங்கும் கிளைகளைப் பரப்பி செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
ஆனால் இந்தப் பெயரில் பலப் போலிக் கடைகளும் செயல்பட்டு வந்தன. இதனை எதிர்த்து தலப்பாக்கட்டி உணவக உரிமையாளர்களில் ஒருவரான நாகசாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில் ’ தலப்பாகட்டி பிரியாணி கோடம்பாக்கம், தலப்பாகட்டி பிரியாணி கூடுவாஞ்சேரி, ஸ்டார் தலப்பாகட்டி ரெஸ்டாரன்ட் கீழ்பாக்கம், தலப்பாக்கட்டு பிரியாணி பூந்தமல்லி, தலப்பாகட்டி பிரியாணி ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஹலால் தலப்பாக்கட்டு பிரியாணி குரோம்பேட்டை, முகமது அஷ்ரப் தலப்பாகட்டி பிரியாணி கூடுவாஞ்சேரி ஆகிய உணவகங்கள் எங்கள் பெயர் மற்றும் குறியீட்டைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த 7 கடைகளும் இனி அந்தப் பெயரை பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்து இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.