அத்திவரதரை குளத்தை சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும் – நீதிபதி உத்தரவு !
அத்திவரதர் தரிசனம் முடிந்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவதை அடுத்து அந்த குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்பவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் பக்தர்களுக்காக 40 ஆண்டுகளுக்குப் பிறகு 48 நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டார். இந்த 48 நாட்களில் பல லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அத்திவரதர் சிலை 48 நாட்கள் வெளியே வைக்கப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் வைக்கப்பட்டது.
இதுசம்மந்தமாக அசோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வார வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதிகள் அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண் மற்றும் நிரப்பப்படவுள்ள தண்ணீர் குறித்து ஆய்வு செய்து ஆகஸ்ட் 19ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டனர். இது சம்மந்தமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிக்கைத் தாக்கல் செய்தது. அதில் ‘குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளது. அந்த நீரை அனந்தசரஸ் குளத்தில் ஊற்றினால், குளத்தில் பாசி படிய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தது. இதையடுத்து அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.