வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 8 நவம்பர் 2014 (12:50 IST)

கடும் குளிரால் விளைச்சல் பாதிப்பு - மல்லிகைப் பூ விலை அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளதால், மல்லிகைப் பூ விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகைப் பூவின் விலை நேற்று முதல் அதிகரித்துள்ளது.

 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புன்செய்புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மல்லிகைப் பூ பயிரிட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு இப்பகுதியில் இருந்து 10 டன் மல்லிகைப் பூ உற்பத்தி ஆகிறது. மேலும் இந்தப் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரு, மைசூரு மற்றும் கோயமுத்துõரில் இருந்து நாள்தோறும் விமானம் மூலம் மும்பைக்கும் இந்த மல்லிகைப் பூ செல்வது குறிப்பிடத்தக்கது.
 
வெய்யில் காலத்தில் நல்ல விளைச்சல் கொடுக்கும் மல்லிகைப் பூ, குளிர் காலத்தில் கடுமையாக விளைச்சல் பாதிப்பது மல்லிகைச் செடியின் தன்மையாகும். கடந்த மாதம் வரை சிறப்பாக விளைச்சல் கொடுத்து வந்தது. ஆனால் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனையானது. இந்த நிலையில் கடந்த மாதம் பாதிக்கு மேல் தொடர்ந்து கடுமையான மழை பெய்தது.

 
இந்த மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. காலை எட்டு மணிவரை வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் குளிர் வாட்டுகிறது. இதனால் மல்லிகைப் பூ விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் வரை மட்டுமே மல்லிகைப் பூ விளைச்சல் கொடுக்கிறது.
 
ஐப்பசி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் அதிகம் இருப்பதால் மல்லிகைப் பூவின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மல்லிகைப் பூ விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனையாகிறது. இதனால் மல்லிகைப் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.