சமரச பாயாசம் கிண்டுகிறவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது: விஜய் குறித்து வன்னி அரசு
சமரச பாயாசம் கிண்டுகிறவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட உள்ள நிலையில், இந்த விழாவில் முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த விழாவின் அழைப்பிதழில் திருமாவளவன் பெயர் இல்லை என்பதும், அதற்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பெயர் மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்து பெரும் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார்.
"அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வரமாட்டேன்" என்று திருமாவளவன் கூறவில்லை. "அம்பேத்கர் குறித்த எந்த புரிதல் எதுவும் இல்லாமல் அரசமைப்பு சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக் கொண்டு சமரச பாயாசம் கிண்டுகிற ஒருவரோடு மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது" என்று தான் அவர் கூறியுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவருடைய இந்த விளக்கம், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.