திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (10:23 IST)

சர்ச்சைக்குள்ளான தொப்புள் கொடி வீடியோ! யூட்யூபர் இர்பான், மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார்!

Irfan

பிரபல யூட்யூபர் இர்பான் பிரசவ அறுவை சிகிச்சையின்போது உள்ளே சென்று வீடியோ எடுத்த விவகாரத்தில் அவர் மீதும், மருத்துவர் நிவேதா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

பிரபல யூட்யூபரான இர்பான் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது குழந்தையின் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதால் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் சமீபத்தில் அவரது மனைவி குழந்தை பெற்ற நிலையில், அறுவை சிகிச்சையை உள்ளே சென்று வீடியோ எடுத்ததுடன் குழந்தையின் தொப்புள் கொடியையும் இர்பானே வெட்டியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள்தான் தொப்புள் கொடியை வெட்ட வேண்டும், இர்பான் அதை செய்ய அனுமதித்தது தவறு என மருத்துவர்கள் இடையே இதற்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. 
 

 

இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் இர்பான் மீதும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை, அதன் மருத்துவர் நிவேதா மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஏற்கனவே மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து மருத்துவரை காவல்துறையினர் நேரில் விசாரிக்க உள்ளனர். மேலும் வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சையில் இருந்த மருத்துவ ஊழியர்களிடமும் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை இர்பான் நீக்கியுள்ளார்.

 

Edit by Prasanth.K