கோமதியின் வெற்றி – பாராட்டிலும் உள்ளே புகுந்த ஜாதி !
தமிழக தடகள வீரர் கோமதி ஆசிய தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அவரை ஜாதி ரீதியாகப் பார்க்க ஆரம்பித்துள்ளனர் சிலர்.
23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கோமதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அரசியல் கட்சிகள் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அவரைப் பாரபட்சம் இல்லாமல் பாராட்டிக்கொண்டிருக்க இப்போது அவரை ஜாதி ரீதியாக பார்க்க ஆரம்பித்துள்ளனர் ஒரு சிலர். இது சம்மந்தமாக அவருக்கு ஒருக் குறிப்பிட்ட ஜாதியினர் பாராட்டு தெரிவித்திருப்பதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.