ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (11:49 IST)

வட இந்தியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு! சீமானுக்கு எதிர்ப்பு, உருவ பொம்மை எரிப்பு!

வட இந்தியர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமானுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அதில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியர் சமூக மக்கள் தூய்மை பணிகளை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

சீமானை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல ஈரோடு பழைய பூந்துறை சாலையில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினருக்கும், தமிழ் புலிகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

தொடர்ந்து ஆங்காங்கே பரபரப்பு நிலவி வரும் நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் சீமான் வட மாநில இளைஞர்கள் குறித்து விரோதம் ஏற்படுத்தும் நோக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K