அதிகார அத்துமீறலைக் கண்டித்துள்ள நீதி அறவோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி. - திருமாவளவன்
மதுரை மாவட்டம் திருமங்கலம், பேரையூர் அருகே மேலப்பட்டி கிராமத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை தகர்த்த காவல்துறை அதிகாரிகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டித்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மதுரை மாவட்டம். திருமங்கலம், பேரையூர் அருகே மேலப்பட்டி கிராமத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை தகர்த்த காவல்துறை அதிகாரிகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டித்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. நேர்மைத் திறத்துடன் அதிகார அத்துமீறலைக் கண்டித்துள்ள நீதி அறவோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி.
நீதிமன்றம், விசிக கொடியை இடித்து அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளதென தவறான தகவலைச் சொல்லி, பத்தாண்டுகளுக்கும் மேலாகப் அங்கே பறந்துகொண்டிருந்த சிறுத்தைகளின் கொடிக் கம்பத்தைப் பீடத்துடன் இடித்துத் தள்ளியது மட்டுமல்லாமல், பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி பலரைக் காயப்படுத்தியதுடன், பொய்வழக்கில் 24 பேரைக் கைது செய்துள்ள, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது, தமிழக அரசே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
அரசு அதிகாரிகள் சிலரின் உள்ளத்தில் ஊறிக் கிடக்கும் 'சாதிப் புத்திக்கு' இது ஒரு சான்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.