கோக்-பெப்சியை நடுரோட்டில் கொட்டி போராட்டம் நடத்திய வெள்ளையன் கைது
தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கம் முடிவெடுத்தது. இந்த முடிவிற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக 80% வெளிநாட்டு பானங்களின் விற்பனை சரிந்துவிட்டது
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட இந்த விழிப்புணர்வை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல வெளிநாட்டு குளிர்பானங்களை அழிக்கும் போராட்டம் வெள்ளையன் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த போராட்டத்தின்போது கோக், பெப்சியை ரோட்டில் கொட்டி போராட்டம் செய்த வெள்ளையன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'வெளிநாட்டு குளிர்பானங்கள் 75 சதவீத கடைகளில் விற்பனை செய்வது இல்லை. எஞ்சிய ஒரு சில கடைகளில் வைத்திருந்த குளிர்பானங்களை அழிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் முழு அளவில் வெளிநாட்டு பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வெள்ளையன் உள்பட வணிகர் சங்க நிர்வாகிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியபோது, 'தமிழகத்தில் இதுவரை ரூ.8 கோடி மதிப்பிலான விற்பனை செய்யப்படாத குளிர்பானங்கள் உள்ளது. அதனை திரும்பப்பெற சம்பந்தப்பட்ட குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்து வருகிறது. அதனை திரும்பப்பெறும் வரை தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும். பெரிய மால்கள், பார்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை மக்கள் வாங்கி குடிக்காமல் இருந்தாலே போதும்' என்று கூறினார்